Posts tagged passed sujatha
சுஜாதா – தனித்துவமான ஆளுமை
Feb 29th
சுஜாதாவின் மரணம் என்னை ஏதோ செய்கிறது. வழக்கம் போல் பின்னிரவு வரை இணையத்தில் மேய்ந்து விட்டு காலை ஆழ்ந்த தூக்கதிற்கு பின் விழித்தபின் அம்மாச்சி சொன்னார்கள் அந்த செய்தியை.. “ஐயய்யோ” என்றேன்.மிகுந்த துயரத்திற்கு ஆளாகியிருந்தது மனது..உடனே கைபேசியில் மனுஷ்யபுத்திரனை அழைத்ததும்,சற்றுமுன் தான் அங்கிருந்து திரும்பியதாக சொன்னார். அவர் குரலில் வேதனை அப்பியிருந்தது.சில நாட்களாகவே உடல்நிலை சரியில்லாமல் இருந்ததாக சொன்னார். உடனே நண்பன் ஆசைத்தம்பிக்கு தெரிவித்தேன்.அவனுக்கும் காலையின் முதல் செய்தியே அதிர்ச்சியூட்டும்படியாக இருந்தது. இழப்பின் துயரம் அவனையும் பற்றிக்கொண்டதை உணர முடிந்தது. சுஜாதா ஒரு தனி மனிதன் அல்ல.அவர் ஒரு இயக்கம் என்பதுதான் அவரைப்பற்றிய எனது அசைக்க முடியாத நம்பிக்கையாக இருந்தது.இலக்கியம்,சினிமா,அறிவியல் என்று எல்லாவற்றிலும் நிரப்ப முடியா வெற்றிடத்தை விட்டுச்சென்றிருக்கிறார்.
“கரையெல்லாம் செண்பகப்பூ” — சுஜாதவுக்கும் எனக்குமான எழுத்தாளன் – வாசகன் உறவை ஏற்படுத்திய ஒன்று, பின் ‘கனவு தொழிற்சாலை’.அவரின் ஒரு நூல் எனக்கு பொக்கிஷம் போல் என்றால் அது “திரைக்கதை எழுதுவது எப்படி”. அது முதல் அவரின் மீது மிகப்பெரிய மரியாதை.அவரின் பங்களிப்பு இருக்கும் தமிழ் சினிமா தரமாக இருந்ததை உணர முடிந்தது.அந்த வகையில் எனக்கு பிடித்த இரண்டு “கன்னத்தில் முத்தமிட்டால்”,”உள்ளம் கேட்குமே”.
தமிழில் அறிவியல் புனைகதைகளுக்கான முன்னோடி.அவரின் சிறுகதைகள் போகிற போக்கில் பொட்டில் அடித்தாற்போல் ஒன்றை உணர்த்தி விட்டு போவதை பலமுறை மொளனமாக அசை போட்டிருக்கிறேன்.அவரின் பன்முக ஆளுமை அவரை நம் சமூகத்தின் தனித்துவமான மனிதராக உயர்த்தியிருக்கிறது.சுஜாதா, நம் எல்லோரையும் “மிகப்பெரிய இழப்பை” உணரச்செய்திருக்கிறார் அவரின் உன்னதமான கடைசி வெற்றியான மரணத்தின் மூலம்.


Recent Comments