Posts tagged ECR chennai
வெயில் புணரும் பெருநகரம்
Apr 15th
சென்னையில், ஒரு விடுமுறை நாளின் பகற்பொழுதில்
மிக வேகமாய் நிகழ்ந்தது அந்த வெளியேற்றம்.
இருசக்கர வாகனத்தின் பின்னால் அமர்ந்திருந்த
காதலியின் இருக்கமான அணைப்பில்,
கிழக்கு கடற்கரைசாலையில் வேகமான பயணம்.
வெயில் எங்கள் உடலில் அப்பியிருந்தது.
கடற்காற்று இருவருக்கும் இடையில் புகுந்து
வெளியேற எத்தனித்தது.
உதடுகள் உலர்ந்துபோய்,மெளனமாய் பரிமாரப்பட்ட
ஒரு முத்தம் உப்புகரித்தது.
தார்சாலையின் கருப்புக்கும்
நடுவே இருந்த மஞ்சள் கோட்டுக்கும்
வெயில் நிறையவே பழக்கமாயிருந்தது.
பசுமாடுகளின் ஆழ்ந்த மொளனமும்
சவுக்குத்தோப்பை நோக்கிய வேகமான நடையும்
வெயில் மிக எளிதில் பழக இயலாத ஒன்றென புரிந்தது.
இருவரும் கைகளை கோர்த்தபோது
உள்ளங்கையின் வியர்வைத்துளிகள்
புதிய வாசனையை உண்டாக்கியிருந்தன.
காலில் செருப்பில்லாமல் தலையில் முக்காடுபோட்டு நடந்துபோன
வயதானவளுக்கு..கண்டிப்பாக தீராத வெறுப்பிருக்கும்
வெயிலின் மீதோ அல்லது வாழ்க்கையின்மீதோ!
ஏன்? இல்லாமல் கூட இருக்கலாம்.
வெயிலின் இரக்கமில்லா உக்கிரத்தை,
அனுபவிக்கும் வலியான சூட்டை, வாழ்க்கையின் அந்த நிமிடத்தை
அவள் ரசித்துக்கொண்டே நடந்திருக்கலாம்.
யார் கண்டார்?
வாழ்க்கையைப்பற்றிய நினைவு வந்ததும்,
பெருநகரத்தைப்பற்றிய நினைவும் வந்துவிடுகிறது.
பெருநகரத்தை நெருங்க நெருங்க
வெயில் தன் புணர்ச்சியின் இறுதிக்கட்டத்தில் இருந்தது.
வாகனங்களின் அலறல் சத்ததோடு வரவேற்றது எங்களை
வெயில் புணரும் பெருநகரம்.


Recent Comments